Saturday 11 May 2013

முதன்மைக் கல்வி அலுவலர் போட்ட V.Good.


முதன்மைக் கல்வி அலுவலர் போட்ட V.Good.

04.01.2013 ஆம் நாள் காலை வழக்கமான பள்ளியின் காலை வழிபாட்டினை முடித்து மாணவர்கள் அவரவர் வகுப்புகளில்  பாடம்பயின்று கொண்டிருந்தனர்.
     பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த ஜீப்பிலிருந்து எங்கள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.து.கணேஷ்மூர்த்தி அவர்களும், கோவை கல்வி மாட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.ரா.பாலமுரளி அவர்களும் இறங்குவதற்குள், மற்றொரு ஜீப்பும் வந்துநின்றது. அதிலிருந்து கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.அ.ஞானகவுரி அவர்களும், கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ர.திருவளர்ச்செல்வி அவர்களும் இறங்கி வகுப்பறைக்குள் நுழைந்தனர். இவர்களுடன் காரமடை ஒன்றியத்தின் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.குருசாமி அவர்களும் இணைந்திருந்தார்.
     கோவை மாவட்டத்தின் தொடக்க, பள்ளிக்கல்வித்துறைகளின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரே நேரத்திரல் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தனர்.
     கல்வி அதிகாரிகள் பள்ளி குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர். பின்பு, கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் சென்று வாய்பாடுகளைக் கேட்டார். கேட்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சரியாகச் சொல்லிப் பாராட்டைப் பெற்றனர்.
     அடுத்து முதல் வகுப்பிற்குச் சென்ற கல்வி அதிகாரிகள், ஒன்றாம் வகுப்பில் ஒரே மேசையில் அமர்ந்திருந்த மூன்று மாணாக்கரிடம் சென்று உங்களின் பெயரைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் என்றார்.
     அதில், சிலேட்டினை அருகிலேயே வைத்திருந்த மு.ராகவி மற்றும் ச.தாரணி ஆகிய மாணவிகள் தங்களின் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிக்காட்டினர். இதில், தமிழில் பெயர் எழுதிய போது முதல் எழுத்தை (Initial) ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தமிழில் பெயர் எழுதும் போது, முதல் எழுத்தையும் தமிழில் எழுதவேண்டும் எனக்கூறினார். M.ராகவி என்று எழுதிய மாணவி மு.ராகவி என்று உடனே திருத்தி எழுதி முதன்மைக்கல்வி அலுவலரிடம் காட்டி V.GOOD வாங்கினாள். அவர், “உன் அம்மாவிடம் போய் இதைக் காட்டு” என்றவுடன் மகிழ்வுடன் தலையாட்டிய மாணவி மிக கவனமாக தன் புத்தகப்பையில் சிலேட்டினை வைத்துக்கொண்டாள்.
     இதன் பிறகு, கல்வி அதிகாரிகள் சமையலறை, கழிப்பறை மற்றும் பள்ளியின் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டனர்.
     கல்வி அதிகாரிகள் பள்ளியைப்பார்வையிட்டுத் திரும்புகையில் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.அ.ஞானகவுரி அம்மா அவர்கள் என்னை அருகில் அழைத்தார். தம்பி உங்க பெயர் என்ன? என்றார். என் பெயரைக்கூறியவுடன்,  “ரொம்ப நல்லா வேலை செய்யறீங்க தம்பி. இதே வேகமும், ஈடுபாடும் உங்கள் பணிக்காலம் முழுவதும் இப்படியே தொடர்ந்து நீடிக்க வாழ்த்துக்கள் தம்பி” என்றார்கள்.
     கல்வி அதிகாரிகளின் வருகையால் புத்துணர்வும், வேகமும் கூடியுள்ள அதே நேரத்தில், தமிழில் பெயர் எழுதும் போது முதல் எழுத்தையும் தமிழிலேயே எழுத முதல் வகுப்பிலிருந்தே பயிற்சியளிக்க வேண்டும் என்று கவனிக்கப்படாமல் இருந்த கவனிக்கப்பட வேண்டிய இதுபோன்ற பகுதிகளின் பட்டியலினைத் தயார் செய்ய வேண்டிய அவசியத்தினை தலைமையாசிரியை அவர்களும், நானும் உணர்ந்து கொண்டோம்.
     கல்வி அதிகாரிகளின் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எங்களது தனிப்பட்ட முயற்சிகளால் மட்டுமே கிட்டவில்லை. எங்கள் கிராம மக்களின் ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், ஆதரவு கரம் நீட்டும் நன்கொடையாள நண்பர்களாலும், எங்களை வழிநடத்தும் அரசின் கல்வித்துறை அதிகாரிகளாலும் மட்டுமே இவைகள் சாத்தியமாக்கப்படுகின்றன.
பதிவு : பிராங்கிளின்.

3 comments:

  1. கல்வி அலுவலர்கள் தமிழில் சரியாக பெயரை எழுதுவது போன்ற விசயங்களையும் கவனிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.

    இது குறித்து என் வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.

    http://blog.ravidreams.net/?p=337

    அப்படியே, மாணவர்களின் கையொப்பத்தையும் தமிழில் இடக் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும். என் தமிழாசிரியர் இதனை ஊக்குவித்ததன் காரணமாக இன்று வரை தமிழிலேயே கையொப்பம் இடுகிறேன்.

    http://blog.ravidreams.net/?p=535

    ReplyDelete
  2. After reading this page my eyes went in tears. Hats off to you.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.